சிங்கள பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து, இலங்கை பன்மைத்துவ நாடாக சட்டப்படி மாற வேண்டும்.

இங்கே ஆஸ்திரலிய பன்மைத்துவ சூழலில் சந்தோஷமாக வாழும் நீங்கள், உங்களது தாய்நாடு மாத்திரம், ஒரு மதம், ஒரு இனம் என்ற ஏகபோக சிங்கள பெளத்த நாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என ஆஸ்திரலிய

மெல்போர்ன் நகரில் சிங்கள மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.

தமது ஆஸ்திரேலய பயணத்தின் போது மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

சமீபத்தில், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பெருமளவில் சிங்கள மக்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சிற்சில இடங்களில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், மக்களும இணைந்திருந்தனர். ஆனால் பொதுவாக சிங்கள மக்களின் போராட்டமாகவே இவை நடந்தன.

இலங்கையில் நாடு பூராவும் போராட்டங்கள் நடைபெற்ற போது, அதற்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள சிங்கள டயஸ்போராவினர் வீதிகளில் இறங்கினீர்கள்.

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டீர்கள்.

இலங்கையின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு தமது ஆதரவை வழங்கி ராஜபக்ஸர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினீர்கள்.

தொலைக்காட்சிகளில் அந்த காட்சிகளை நாம் கண்டோம். அந்த சந்தர்ப்பத்தில் தான் உலகம் முழுவதும் பெருவாரியான சிங்கள மக்களும் வாழ்கிறார்கள் என்பதை பலர் அறிந்து கொண்டார்கள்.

இந்த சிங்கள மக்களுக்கு இன்று பாரிய பொறுப்பொன்று உள்ளது. உங்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள பல்கலாச்சார விருந்தோம்பல்களை நீங்கள் அனுபவிக்கிறீர்கள். இங்கே சந்தோஷமாக வாழ்கிறீர்கள்.

இங்கே ஆஸ்திரேலிய அரசாங்கமே முன்வந்து, உங்களது சிங்கள மொழி கலாச்சாரம் உட்பட சுமார் 68 மொழி கலாச்சாரங்களை வளர்த்து விடுகிறது.

இங்கே பன்மொழி, பல்லின, பன்மத கலாச்சாரம் ஒரு சுமையாக கருதப்படாமல், ஒரு வர்ணமய சாதகமாக கொண்டாடப்படுகிறது. அரசாங்க கொள்கையாகவே முன்னெடுக்கப்படுகிறது.

இங்கே வாழும் சிங்களவர்களின் கடமை என்ன?

இந்த பன்மைத்துவ செய்தியை நீங்கள் இலங்கையின் சிங்கள தலைவர்களிடம் எடுத்து செல்லுங்கள். அது உங்கள் கடமை.

ராஜபக்சர்களாக இருக்கலாம், ரணில் விக்ரமசிங்கவாக இருக்கலாம், விமல் வீரவங்சவாக இருக்கலாம், உதய கம்மன்பிலவாக இருக்கலாம், சஜித் பிரேமதாசவாககூட இருக்கலாம் அவர்களுக்கு இந்த செய்திகளை பெற்றுக் கொடுங்கள்.

ஒரு சிங்கள பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து இலங்கை, ஒரு பன்மைத்துவ நாடு என்ற நிலைமைக்கு சட்டரீதியாக மாற வேண்டும்.

இலங்கை ஒரு பன்மைத்துவ நாடாக உதவுங்கள். Help to Establish Sri Lanka as a Multi Cultural State.

இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவதிலேயே இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார மீட்சி இருக்கிறது.

இதுபற்றிய பாரிய பொறுப்பு வெளிநாடுகளில் வாழும் சிங்கள இலங்கையர்களிடம் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.