மாகாண சபை இயங்காத சூழலில் வடக்கிலுள்ள படையினருக்கு அரச காணிகள் தாரைவார்ப்பு!

வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்புத் தரப்பினருக்கு 40 ஏக்கர் அரச காணிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விக்கு, வடக்கு மாகாண காணி திணைக்களம் வழங்கிய பதிலிருந்தே இந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

வடக்கு மாகாணத்தில் 22 ஆயிரம் குடும்பங்கள் காணிகள் இல்லாமல் இருக்கும் சூழலில், இந்தக் காணிகள் 2019, 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளில் கையளிக்கப்பட்டுள்ளன.

கடற்படையினருக்கு 22.15 ஏக்கரும், பொலிஸாருக்கு 9.5 ஏக்கரும், இராணுவத்தினருக்கு 6.25 ஏக்கரும், விமானப்படைக்கு 1.24 ஏக்கரும் வழங்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு 2019 ஆம் ஆண்டு அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுசுட்டானில் 0.4 ஏக்கரும், புதுக்குடியிருப்பில் 4.9 ஏக்கரும், கொக்கிளாயில் 1 ஏக்கரும், பளையில் 2 ஏக்கரும், நயினாதீவில் 0.25 ஏக்கரும், வவுனியா தெற்கில் 1 ஏக்கரும் வழங்கப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டு கடற்படையினருக்கு சங்கானை பிரதேச செயலர் பிரிவில் அராலியில் 0.37 ஏக்கரும், யாழ்ப்பாணத்தில் 0.06 ஏக்கரும், ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் 0.3 ஏக்கரும், கொக்குத்தொடுவாயில் 3.39 ஏக்கரும், கொக்கிளாய் கிழக்கில் 1.49 ஏக்கரும், பூநகரியில் 7.38 ஏக்கரும், மண்டைதீவு தெற்கில் 0.62 ஏக்கரும், அல்லைப்பிட்டியில் 0.25 ஏக்கரும், வேலணை கிழக்கில் 0.25 ஏக்கரும், ஊர்காவற்றுறை சுருவிலில் 0.19 ஏக்கரும் வழங்கப்பட்டுள்ளன.

விமானப்படையினருக்கு கேப்பாபிலவில் 1.24 ஏக்கர் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு கரைதுறைப்பற்றில் 1.83 ஏக்கர் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இராணுவத்தினருக்கு முசலியில் 4.42 ஏக்கரும், கடற்படையினருக்கு வேலணையில் 0.31 ஏக்கரும், நெடுந்தீவில் 1.5 ஏக்கரும் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கடற்படையினருக்கு பூநகரி பொன்னாவெளியில் 5 ஏக்கரும், வலைப்பாட்டில் 0.25 ஏக்கரும், முசலியில் 0.21 ஏக்கரும், காரைநகரில் 0.04 ஏக்கரும் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த அரச காணிகளுக்குரிய கோரிக்கைகளில் சில, பாதுகாப்புத் தரப்பினரால் வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் முன்வைக்கப்பட்டபோது அப்போதைய காணி அமைச்சராக இருந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.