எதிரணியிடம் ஆட்சியை ஒப்படைத்தால் நாடு பேரழிவைத்தான் சந்திக்கும் என்கிறார் ரணில்.

“எனக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் எதிர்வரும் நாட்களில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க எதிரணியினரும் அவர்களின் ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனை நாம் எதிர்கொள்ளும் வகையில் வியூகங்களை வகுக்க வேண்டும்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஜப்பானுக்குச் செல்ல முன்னர் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்களுடன் நேற்றுமுன்தினம் மாலை நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிரணியினர் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தால் அதனை நாம் பரிசீலிக்க முடியும். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் உள்ளன.

ஆட்சி மாற்றத்தைக் கோரும் அவர்களிடம் மாற்று வழி எதுவும் இல்லை. நாடாளுமன்றத்தில் ஒரு ஜனாதிபதியையோ அல்லது பிரதமரையோ தெரிவு செய்யும் பலம் எதிரணியிடம் இல்லை.

இவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் நாடு பேரழிவைத்தான் சந்திக்கும்.

தேர்தல்களை அதற்குரிய காலங்களில்தான் நடத்த முடியும். எதிரணியினர் விரும்புவது போல் தேர்தல்களை நடத்த முடியாது.

தற்போதைய நிலைமையில் பல சவால்களை எதிர்கொள்வேன் என்று தெரிந்துகொண்டுதான் ஆரம்பத்தில் பிரதமர் பதவியையும், அதன்பின்னர் ஜனாதிபதி பதவியையும் பொறுப்பேற்றேன்.

முன்வைத்த காலை நான் ஒருபோதும் பின்வைக்க மாட்டேன். நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு கண்டே தீருவேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.