சற்று முன் ஆரம்பமான ஷின்ஷோ அபேவின் இறுதி சடங்கு.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 50 நாடுகளின் தலைவர்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜப்பான் சென்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஜூலை 8ம் திகதி நரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்து, சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றவரான அவரது திடீர் மறைவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஷின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவில் அந்நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு (இலங்கை நேரப்படி மாலை 10.30 மணிக்கு) தொடங்குகிறது.

இந்த இறுதிச் சடங்கில் எமது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், சிங்கப்பூர் பிரதமர் லி சீன் லூங், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோி அல்பனிஸ், வியட்நாம் ஜனாதிபதி கூயென் ஜூவான் புக், தென் கொரிய பிரதமர் ஹான் டக் சூ, பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சாரா டடெர்டீ, இந்தோனேஷிய துணை ஜனாதிபதி மருஃப் அமின், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்செல் உட்பட 50 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 4,300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். டோக்கியோவின் மையப் பகுதியில் உள்ள புடோகன் என்ற இடத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

சர்வதேச தலைவர்களின் வருகையை அடுத்து டோக்கியோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காவல்துறையினர் டோக்கியோ வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

ஷின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கின்போது ராணுவ வீரர்கள் ஆயிரம் பேர், அவருக்கு 19 சுற்று குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.