குறைகிறது ஆம்னி பேருந்து கட்டணம்… புதிய பட்டியல் விரைவில் வெளியாகிறது

ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டண பட்டியலை வெளியிட உள்ளதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை காலம் தொடங்கியுள்ளதையடுத்து, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல குறைந்த பட்சம் 2500 முதல் அதிபட்சம் 4ஆயிரம் ரூபாய் வரையும்,அதேபோல சென்னையில் இருந்து கோவை செல்ல குறைந்த பட்சம் 2800 முதல் அதிபட்சம் 3200 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது.

மேலும் சென்னையில் இருந்து மதுரை , திருச்சி , தூத்துக்குடி , கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்ல அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட 3 மடங்கு வரை கட்டணம் உயர்ந்து உள்ளது .

தன்னிச்சையாக கட்டண உயர்வை அன்மையில் அறிவித்திருந்த நிலையில் நேற்று அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது கட்டணங்களை குறைத்து புதிய பட்டியல் வெளியிட உள்ளதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஆயுத பூஜைக்கு முன்பாக , இம்மாத இறுதிக்குள் ஆம்னி பேருந்துகளுக்கான குறைக்கப்பட்ட புதிய கட்டண பட்டியல் வெளியாகிறது. புதிய கட்டண பட்டியலில் ஏற்கனவே அறிவித்திருந்ததை காட்டிலும் கட்டணங்கள் குறைவாக நிர்ணயிக்கப்படும் என அச்சங்கத்தினர் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணத் தொகையை குறைப்பது தொடர்பாக ஆம்னி பேருந்துகளின் முக்கிய ஆப்ரேட்டர்கள் இன்று மாலை இணைய வழியில் ஆலோசிக்க உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.