இலங்கைக்கு ஐ.நாவும் சர்வதேச சமூகமும் இனியும் கால அவகாசம் வழங்கவேகூடாது.

“இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் புதிய தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளையும், சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஐ.நாவும், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதைவிடுத்து இலங்கை அரசுக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்கி வந்தால் அதில் எந்தப் பயனும் இல்லை.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழ் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் புதிய தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் வரவேற்கின்றோம்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமாக இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

அதேசமயம் சாட்சியங்கள் சேகரிக்கும் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இதை நாங்கள் வரவேற்கின்றோம்.

புதிய தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளையும், சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஐ.நாவும், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து இலங்கை அரசுக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்கி வந்தால் அதில் எந்தப் பயனும் இல்லை.

ஐ.நாவும், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசும், அதன் படைகளும் எதிர்கொண்டுள்ளன.

எனவே, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இவை நிறைவேற ஐ.நாவையும், அதன் உறுப்பு நாடுகளையும் தமிழர்கள் நம்பியுள்ளார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.