ஞானசேகரனுக்கு ‘சாகித்திய ரத்னா’ விருது! – வழங்கி வைத்தார் ஜனாதிபதி.

இலக்கியத்தில் சிறந்து விளங்கும் இலங்கை எழுத்தாளர்களைக் கௌரவிப்பதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அரச இலக்கிய ஆலோசனை சபை, இலங்கை கலைப் பேரவை, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 65ஆவது அரச இலக்கிய விருது விழாவில் 40 அரச இலக்கிய விருதுகளும், 3 சாகித்திய ரத்னா விருதுகளும் வழங்கப்பட்டன.

பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு (சிங்களம்), சிரேஷ்ட பேராசிரியர் கமனி ஜயசேகர (ஆங்கிலம்) மற்றும் டீ.ஞானசேகரன் (தமிழ் ) ஆகியோர், ஒரு கலைஞருக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஜனாதிபதியால் வழங்கப்படும் சாகித்திய ரத்னா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

எரிக் இளையப்ஆரச்சியின் “நகுல முனி” நாவலும் (சிங்களம்), பிரேமினி அமரசிங்கவின் “Footprints” (ஆங்கிலம்) மற்றும் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” (தமிழ்) நாவலும் சிறந்த நாவல்களாக விருது பெற்றன.

2022ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது விழாவுக்காக வெளியிடப்பட்ட நினைவுப் பதிப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அரச இலக்கிய சபையின் தலைவர் வண.ரம்புக்கண சித்தார்த்த தேரர், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோருடன், பேராசிரியர் ஜே.பி. திஸாநாயக்க, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.