தேர்தலைத் தள்ளிப்போட ஒருபோதும் இடமளியோம்! டலஸ் எம்.பி. திட்டவட்டம்.

“ஈரானில் இருந்த அழுக்கு மனிதன் குளிப்பதற்கு அஞ்சியதுபோல், தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசும் அஞ்சுகின்றது. ஆனால், ஈரான் மக்கள் ஒன்றுகூடி அழுக்கு மனிதனை குளிப்பாட்டியதுபோல, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை அரசுக்குப் பிரயோகிக்கும்.”

இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்து ஊடகங்களிடம் வெளியிடுகையிலேயே டலஸ் அழகப்பெரும இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திட்டமிட்ட அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசு முயற்சிக்கின்றது. அதன் ஓர் அங்கமாகவே தெரிவுக்குழு நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

ஈரானில் வாழ்ந்த நபர் ஒருவர் 5 தசாப்தங்கள் வரை குளிக்கவில்லை. ஏனெனில் தலையில் தண்ணீர் பட்டால் இறந்துவிடுவோம் என அவர் நம்பியுள்ளார். இறுதியில் உலகம் அவரை, அழுக்கான மனிதன் என அடையாளப்படுத்தியது.

அது போலவே தேர்தலை நடத்துவதற்குத் தற்போதைய அரசும் அஞ்சுகின்றது. அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.