ஏக் பூல் தோ மாலி : ரணில் – மகிந்த அரசியல் காதல்

பொதுவாக இலங்கை அரசியலில் மட்டுமன்றி , உலக அரசியலிலும், அப்பா அம்மாவுக்குப் பிறகு அரசியலுக்கு வரும் மகனோ , மகளோ அரசியலில் அப்பா அம்மா பதவிக்கு அல்லது தேர்தல் தொகுதிக்கு தகுதியானவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

டி.எஸ். சேனாநாயக்க இறந்தபோது, ​​ DS இன் மிகப் பழமையான தெதிகம தேர்தல் தொகுதி டட்லி சேனாநாயக்கவுக்கு கிடைத்தது.

ஶ்ரீமாவோ இறப்பதற்கு முன்னரே , அத்தனகல்ல தேர்தல் தொகுதி சந்திரிகாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதுபோல ரணசிங்க பிரேமதாச குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட பின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி சஜித் துக்கு கிடைக்கும் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் பிரதமராக பதவியேற்ற ரணில் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார்.

சஜித் அரசியலுக்கு வந்த போது, கொழும்பில் சஜித்துக்கு ஒரு தேர்தல் தொகுதியை கொடுக்க ரணில் விரும்பாததால், கொழும்பிற்கு வெளியே ஒரு தேர்தல் தொகுதியை தேர்வு செய்ய நேர்ந்தது.

அப்போதைய ஜனாதிபதி விஜேதுங்க மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் , சஜித் அல்லது சஜித்தின் தாயார் அல்லது பிரேமதாச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை.

இப்பிரச்சினையால் சஜித்துக்கு , யாரும் செல்ல விரும்பாத ஹம்பாந்தோட்டை தேர்தல் தொகுதியை 1994 ஆம் ஆண்டு யூ.என்.பி. ஜனாதிபதி வேட்பாளராக இருந்த காமினி திஸாநாயக்கவே கொடுத்தார்.

காமினி திசாநாயக்க படுகொலையான பின்னர் விஜேதுங்கவும் ஓய்வு பெற்றார். ரணில் யூ.என்.பியின் தலைவராகிய பின்னர் சஜித் , யூ.என்.பி. இளைஞர் முன்னணி தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தார். ஆனால் அதை ரணில் தடுத்தார். ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குலரத்னவிடம் ரணில் , யூ.என்.பி. இளைஞர் முன்னணி தலைமைத்துவத்தை கையளித்தார்.

1994 பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களை மட்டுமே பெற்றது.

ஆனந்த குலரத்ன ஒரு இடத்தில் வெற்றி பெற்றார். அடுத்த வெற்றியை மேர்வின் சில்வா பெற்றார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அன்றைய பொது பெரமுன வெற்றி பெற்றது. அம்பாந்தோட்டை யின் அந்த வெற்றிக்கு மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார்.

சஜித் , ஹம்பாந்தோட்டையில் அரசியல் செய்ய , 1994 பொதுத் தேர்தலின் பின்னர் வந்தார். ஹம்பாந்தோட்டைக்கு சஜித் வந்த போது, சஜித் தனக்கு சவாலாக இருப்பார் என அப்போதே  மஹிந்த உணர்ந்தார்.

1994ஆம் ஆண்டுக்கு முன்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் , அனுரவும் சந்திரிகாவும் குத்து வெட்டுப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலிருந்தே ரணிலின் நண்பராக மஹிந்த இருந்தார்.

ஜே.ஆர் மற்றும் பிரேமதாசவின் அரசாங்கங்களில் ரணில் அமைச்சராக இருந்த போது , ரணில் ஸ்ரீலங்கா சுதந்தரிக் கட்சியின் அனுர பண்டாரநாயக்கவின் அணிக்கு ஆதரவளித்தார். அந்த அணியில் மகிந்த பலம் பொருந்திய ஒருவராக இருந்தார். இந்த அணியில் மேர்வின் சில்வாவும் இருந்தார்.

1993ஆம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது, ​​அநுர பண்டாரநாயக்கவும் , மேர்வின் சில்வாவும் மஹிந்தவுடன் புரிந்துணர்வுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தனர். மஹிந்த மட்டும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறவில்லை. மேர்வின் சில்வாவை அரசியலுக்கு கொண்டு வந்தவரும் மகிந்த ராஜபக்சதான் .

1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டையில் வெற்றி பெற்ற பின்னர் கூட மஹிந்த மற்றும் மேர்வின் சில்வாவின் நட்பு சிதைவடையவில்லை.

1994 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற ஆனந்த குலரத்னவும் , மஹிந்தவின் பழைய நண்பராக இருந்ததால் , 1983 முல்கிரிகல இடைத்தேர்தலில் ஆனந்த குலரத்ன ஐ.தே.க.வில் போட்டியிட்ட போது, ​​ராஜபக்ச குடும்பத்தில் இருந்தும் மஹிந்தவின் எதிர்ப்பினூடாக , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே போட்டியிட்ட நிருபமா ராஜபக்சவை தோற்கடிக்க , மஹிந்த சதிவலைகளை பின்னினார்.

பண்டாரநாயக்க குடும்பம் இரண்டாகப் பிரிந்த போது, ​​அம்பாந்தோட்டை ராஜபக்ச குடும்பமும் இரண்டாகப் பிரிந்தது.

மஹிந்த அனுரவுடன் இருந்தார்.

விஜய-சந்திரகாவுடன் நிருபமா இருந்தார்.

அன்று  நிருபமாவை தோற்கடிக்க இணைந்து பாடுபட்டதால் மகிந்தவுக்கும் ,  குலரத்னவுக்கும் இடையிலான நட்பு மீண்டும் துளிர்விட்டது.

சஜித்தை அரசியல் ரீதியாக அழிக்க , மேர்வின் மற்றும் ஆனந்த குலரத்னவின் நட்பை மஹிந்த பயன்படுத்தினார்.

அம்பாந்தோட்டையில் சஜித் , மஹிந்தவுக்கு சவாலாக இருந்தார். இலங்கையில் ரணிலுக்கு சவாலாக மாறினார் சஜித்.

ஒரு நாள் சஜித் அம்பாந்தோட்டையில் வெற்றி பெற்றால் , சஜித் தனக்கு சவாலாக மாறுவதை தடுக்க ரணில் ஹம்பாந்தோட்டையிலிருந்த மஹிந்தவின் உதவியை ரணில் நாடினார். அதற்காக இளைஞர் முன்னணியின் தலைவர்களாக இருந்த ஆனந்த குலரத்ன, மேர்வின் சில்வா ஆகியோரின் ஆதரவை ரணில் , மஹிந்தவுக்கு பெற்றுக் கொடுத்தார்.

இந்த ரணில்-மஹிந்த-ஆனந்த-மேர்வின் கூட்டணிக்கு எதிராக சஜித்தின் தனி போராட்டத்தின் உச்சக்கட்டம் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிய தேர்தலாகும்.

இந்த சிறிய தேர்தலில் ஹம்பாந்தோட்டையில்,  சஜித்தின் வேட்பாளர்கள் மஹிந்தவின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. ஆனால் மேர்வின் மற்றும் ஆனந்தவின் வேட்பாளர்களுக்கு அந்தக் கும்பலால் அச்சுறுத்தல் இருக்கவில்லை.

1997 இல், ஒரு காலத்தில் சஜித்தின் மனைவி ஜலனி பிரேமதாசவின் உயிர் அரும் தப்பில் காப்பாற்றப்பட்டது. வீடு வீடாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதே சமயம் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட அஹங்கம கங்காணம்கே குணரத்னவும் சுடப்பட்டார். அவரும் நூலிழையில்  உயிர் தப்பினார். பின்னர் அவர் பெலியத்த உள்ளூராட்சி சபையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் ,  ஜூலை 12, 1997 இல், 1997 இடைத்தேர்தலின் பின்னர் பெலியத்த சந்தையில் கங்காணம்கே குணரத்ன படுகொலை செய்யப்பட்டார்.

அப்போது வெறும் தொகுதி அமைப்பாளராக இருந்த சஜித், கட்சித் தலைவர் ரணிலை இந்தக் கொலைக்கு எதிராக செயல்பட சொன்னாலும், பெலியஅத்த மகிந்தவின் கோட்டை என்பதால் ரணில் அதைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனந்த குலரத்னவும் , மேர்வின் சில்வாவும் கங்காணம்கே குணரத்ன கொலைக்கு எதிராக குரல் எழுப்புவதை ரணில் விரும்பவில்லை.

இதை அப்போதைய யூ.என்.பி.யில் மாத்தறை தேர்தல் தொகுதிக்கு பொறுப்பான ரொனி டி மெல்லால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ரணிலைச் சந்தித்து ஹம்பாந்தோட்டைக்குச் சென்று இந்தக் கொலைக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், ஆனந்த குலரத்னவினால் அல்ல, தானே அதை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்தார். ரணில் ரொனிக்கு பயந்து அம்பாந்தோட்டையில் சத்தியாக்கிரகத்தை நடத்த தீர்மானித்தார். அப்போதைய யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க , இந்த கொலையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கொண்டு செல்ல முன்மொழிந்த போதும் அதனையும் ரணில் தடுத்தார்.

இறுதியில் மகிந்த அம்பாந்தோட்டையில் மேலும் பலமடைந்தார்.

ஆனால் சஜித் 2000 பொதுத் தேர்தலிலும், 2001 பொதுத் தேர்தலிலும் மஹிந்தவை தோற்கடித்து ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெற்றி பெற்றார்.

2001ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்தை அமைத்த போதும் சஜித்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு துணை அமைச்சர் பதவியொன்று வழங்கப்பட்டது. ஆனந்த குலரத்னவுக்கு ஒரு சக்திவாய்ந்த அமைச்சுப் பதவியை ரணில் வழங்கினார். அதனால் சஜித் ஹம்பாந்தோட்டையில் பலமிழந்து வீழ்ந்தார்.

2003ஆம் ஆண்டு மஹிந்த எதிர்க்கட்சித் தலைவரானார், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மகிந்த பிரதமர் வேட்பாளராக இறங்கி , அம்பாந்தோட்டையை வென்று ரணிலின் பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டார்.

ரணிலை பாதுகாக்கவென ஹம்பாந்தோட்டையில் உருவாக்கிய மகிந்தவே , 2005 ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிடப் போகும் ,  தனது எதிரி என்பதை ரணிலுக்குத் தெரிய வந்ததும் ரணிலுக்கு வியர்த்துப் போனது.

அந்த தேர்தலில் மஹிந்த ஜனாதிபதியானார். ரணில் தோற்கடிக்கப்பட்டார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர், கட்சித் தலைமைப் பதவியிலிருந்து ரணிலை விலகுமாறு அனைவரும் கூறியபோது, ​​ரணிலை விலக வேண்டாம் என அறிவுறுத்தியவர் மஹிந்ததான்.

கட்சித் தலைமைப் பதவிக்கு ரணிலுடன் போட்டியிட்ட கரு ஜெயசூரியவை , மகிந்தவின் ஆட்சிக்குள் இழுத்து , பதவியும் கொடுத்து அமர்த்தியதன் மூலம்  , ரணிலின் ஐதேக தலைமையை மகிந்த பலப்படுத்தினார்.

1994 முதல் 2005 வரை ரணில், அம்பாந்தோட்டையில்  மஹிந்தவை பலப்படுத்தினார்.

2005ஆம் ஆண்டிலிருந்தே மஹிந்தவினால் , ரணிலைப் பலப்படுத்தும் ஆட்டம் ஆரம்பமானது.

2010ல் சஜித் ரணிலின் தலைமைக்கு சவால் விட வந்த போது,  ரணிலை காப்பாற்றியவரும் மஹிந்ததான்.

சஜித் ஆதரவு தரப்பினர் , ஐதேகவின் தலைமையகமான சிறிகொத்தாவின் அதிகாரத்தை கைப்பற்ற அணிவகுத்து பேரணியாக வந்த போது, ​​மஹிந்த , சிறிகொத்தாவுக்கு செல்லும் பாதையை , காபெட் போடவென தடைகளை ஏற்படுத்தி வீதியை மறித்தார்.

அத்தோடு மகிந்தவின் ஆதரவு ஊடகங்களின் மூலம் ரணிலை தலைதூக்க  பரப்புரை செய்து , சஜித்தை வீழ்த்தும் வரை ஊடகங்களைக் கொண்டு  தாக்கினார். அதனால் ரணில் எப்படியோ ஐதேக தலைமையை காப்பாற்றிக் கொண்டார்.

2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சஜித்திடம் கட்சியை வழிநடத்த கொடுக்கும்படி , பாராளுமன்ற உறுப்பினர்களும் , கட்சி உறுப்பினர்களும் ஏகமனதாக ரணிலிடம் கேட்ட போது, ரணிலை பதவி விலக வேண்டாம் என்று கூறியதும் மகிந்ததான்.

இறுதியில் ஐதேக கட்சி பிளவுபட்டது.

2020 பொதுத் தேர்தலின் போது ரணில் தோற்று , அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனதை அடுத்து, ரணிலை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரச் சொன்னது மஹிந்தவும், நாமலும்தான்.

அதனூடாக ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தி,  சஜித்தின் எதிர்கட்சித் தலைமையை பறிக்க நினைத்தனர்.

அந்த திட்டம் சரியாக வேலை செய்யவில்லை.

இறுதியில் பொதுஜன பெரமுன எனும் மொட்டு கட்சி இரண்டாகவும் மூன்றாகவும் பிரிந்தது.

அரகலய போராட்டம் வந்து மஹிந்தவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு கோட்டாபய கூறிய போது, ​​கோட்டாபய சஜித்தை பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தார். அது ஒரு ஏமாற்று கண் துடைப்பு அழைப்பு.

சில நிபந்தனைகளுடன் கட்சியின் அழுத்தம் காரணமாக பிரதமர் பதவியை ஏற்க சஜித் விருப்பம் தெரிவித்தபோது, ​​சஜித்தை பிரதமராக்க வேண்டாம் என்ற உறுதியான முடிவில் ராஜபக்ச குடும்பம் இருந்ததால்தான் , உங்கள் முடிவு தாமதமாகிவிட்டது என சஜித்திடம் கோட்டா சொன்னதோடு , ரணிலிடம் பிரதமர் பதவி கொடுக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

கோட்டாபய பதவி விலக தீர்மானித்து , அனைத்து கட்சி ஜனாதிபதியொருவரை நியமிக்க சபாநாயகரை கட்சி தலைவர்கள் சந்தித்த நேரத்தில் , சஜித் ,  சர்வகட்சி ஜனாதிபதியின் கீழ் எப்படியும் பிரதமராக வருவார் என்ற அச்சத்தில் ராஜபக்சக்கள் ரணிலை உடனடியாக தற்காலீக ஜனாதிபதியாக்கினர்.

ஐக்கிய மக்கள் சக்தியை , ரணில் பிளவுபடுத்துவார் என நினைத்து ராஜபக்சவினர் , ரணிலை பிரதமராக்கினர்.

அதேபோல ரணிலை ஜனாதிபதியாக்கியதும் ,  ஐக்கிய மக்கள் சக்தியையும் ரணில் பிடுங்கி தம் வசம் இழுத்துக் கொள்வார் என்ற கனவில்தான்.

ரணிலால் அதைச் செய்ய முடியவில்லை. இப்போது ரணில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மகிந்தவின் கட்சியான மொட்டைப் சிதைக்க ஆரம்பித்துள்ளார்.

1994 முதல் 2005 வரை சஜித்தை அழிக்க ரணில், மகிந்தவை தூக்கி நிறுத்தினார்.

2005 முதல் 2022 வரை சஜித்தை அழிக்க மகிந்த தரப்பு ரணிலை தூக்கி நிறுத்தினர்.

இப்போது மகிந்த தரப்பும், ரணிலும், ‘ஏக் பூல் தோ மாலி எனும் ஒரு மலரை இருவர் காதலித்த கதை போல , மொட்டுவை தனதாக்கிக் கொள்ள ,  குத்து வெட்டுகளை இருவரும் திரை மறைவில் செய்யத் ஆரம்பித்துள்ளனர்?’

சஜித்துக்கு இன்னும் 55 வயதுதான்.

மஹிந்தவுக்கு 76 வயது.
ரணிலுக்கு 73 வயது.
இந்த வயதில் இருவரும் அரசியல் அன்னத்தை பார்த்து கனவு தாலாட்டு பாட ஆரம்பித்துள்ளனர்.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
– தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.