காணாமல் போனோர் அலுவலக தவிசாளரை பதவியில் இருந்து தூக்குங்கள் மனோ கணேசன், விஜேதாசவிடம் காட்டமாக தெரிவிப்பு.

கடந்த அரசாங்கத்தின் இறுதி காலத்தில் நான்தான் இந்த விடயம் தொடர்பான அமைச்சர். ஆகவே எனக்கு, இந்த காணாமல் போனோர் காரியாலயம் பற்றி நன்கு தெரியும். 

இங்கே இதுபற்றி எம்பி சுமந்திரன் கூறியதை நான் ஏற்கிறேன். காணாமல் போனோர் தொடர்பான அலுவலக தவிசாளருக்கு பைத்தியமோ தெரியவில்லை. இந்நாட்டில் யாரும் காணாமல் போகவில்லை என்று கூறுகிறார். அப்படி பேச வேண்டாம் என்று அவருக்கு கூறுங்கள். 

முதலில் அவரை அந்த தவிசாளர் பதவியில் இருந்து விலக்குங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று இவ்விடயம் தொடர்பில் வாதப்பிரதிவாதம் நடைபெற்ற போது இதுபற்றி குறுக்கிட்டு பேசிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

காணாமல் போனோர் தொடர்பான காரியாலய தவிசாளர், இந்நாட்டில் யாரும் காணாமல் போகவில்லை என்று கூறுகிறார். உங்களுக்கு அதுபற்றி தெரிந்து இருக்க வேண்டும். 

யாரும் காணாமல் போகவில்லை என்றால் இந்த காரியாலயம் எதற்கு? சபாநாயகர் அவர்களே, இந்த காரியாலயம் பற்றிய சட்டமூலத்தை மிகவும் கஷ்டப்பட்டு நாம் இந்த சபையில் கொண்டு வந்து சட்டமாக்கினோம். இப்போது அரசு தரப்பில் இருக்கும் கூட்டம்தான் இதற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தது.

நாம் மாத்தறையில் ஒரு காரியாலயம் திறந்தோம். நான் திறந்து வைத்தேன். யாழ்ப்பாணத்தில் திறந்தேன். மன்னாரிலும் திறந்து வைத்தேன். 

நீங்கள் எமது காலத்தில் விண்ணப்பங்கள் 65 தான் வந்தது எனவும், இன்று உங்கள் காலத்தில் 2000 விண்ணப்பங்கள் வந்துள்ளன என இப்போது கூறினீர்கள். அந்த கணக்கு எனக்கு ஞாபமில்லை. தேடி பார்க்க வேண்டும். 

ஆனால், நிறைய பணி செய்தோம். நீங்கள் எம்மை வேலை செய்ய விடவில்லை. இப்போது எதிரணியில் உள்ள நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். அக்காலத்தில் நீங்கள் எம்மை வேலை செய்ய விடவில்லை.  

88/89 ஆண்டு காலத்திலும், 2000ம் ஆண்டுகளிலும் இந்நாட்டில் ஆட்கள் காணாமல் போனார்கள். 

வடக்கில், கிழக்கில், தெற்கில், மேற்கில் காணமல் போனார்கள். நாடு முழுக்க நடந்தது. இந்த சாபத்தை, பாவத்தை முழுக்கவும் துடைத்து எறிவோம். அதனால்தான் இந்த காரியாலயத்தை நாம் அமைத்தோம். 

நீங்கள் எதிரணியில் இருந்து எமக்கு தராத ஒத்துழைப்பை நாம் இப்போது இங்கிருந்து உங்களுக்கு தருகிறோம். ஆனால், அந்த தவிசாளரை மாற்றுங்கள். அவரது கூற்று, இன்று பதிவாகி உள்ளது. 

இது தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மட்டுமல்ல, அவரது கூற்றுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  செய்திருக்க வேண்டும். அவர்கள் நல்லத்தனம் காரணமாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை போலும்.     

Leave A Reply

Your email address will not be published.