சென்னை-மைசூரு: முதல் வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார் மோடி!

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பெங்களூருவின், கிராந்திவீர சங்கொலி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த தருணத்தில், வரும் 2023 ஆகஸ்ட்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுதும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டில் ஏற்கெனவே 4 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூரு இடையே இன்று தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும்.

ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் கொள்கையின் கீழ் கர்நாடகத்தின் முஸ்ராய் துறையால் இயக்கப்படும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

காசி யாத்திரை மேற்கொள்ள விரும்பும் ஏராளமான பக்தர்களின் கனவை இது நிறைவேற்றும் எனத் தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் தள்ளுபடி விலையில் எட்டு நாள் சுற்றுலா தொகுப்பை வழங்குகிறது.

மேலும், காசி விஸ்வநாதர் யாத்திரை பக்தர்களுக்கு கர்நாடக அரசு ரூ.5,000 நிதியுதவி வழங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ரயில் வாராணசி, அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட புனித இடங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.