ஆளுநர் பதவியைத் தக்க வைக்கக் காணியைத் தாரைவார்க்க முயலும் ஜீவன்!

வடக்கு மாகாண ஆளுநர் உட்பட்ட இலங்கை முழுவதிலும் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வடக்கு மாகாணத்தில் முப்படையினரும் காணி சுவீகரிப்பில் எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் எதிர்வரும் 15ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் காணி அமைச்சின் மேலதிக செயலர், காணி ஆணையாளர் நாயகம், காணி உரித்து திணைக்களத்தின் ஆணையாளர், நில அளவையாளர் நாயகம், இராணுவம், கடற்படை, விமானப் படை என்பனவற்றுடன், வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்தினதும் காணி மேலதிக மாவட்டச் செயலர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர், மருதங்கேணி பிரதேச செயலர், வேலணை பிரதேச செயலர், ஊர்காவற்றுறை பிரதேச செயலர், காரைநகர் பிரதேச செயலர், சங்கானை பிரதேச செயலர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர், மன்னார் நகர பிரதேச செயலர், முசலி பிரதேச செயலர், நானாட்டான் பிரதேச செயலர், கரைதுறைபற்று பிரதேச செயலர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச காணிகள் மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பான விடயங்களில் தீர்வு காணப்பட வேண்டியவை தொடர்பில் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளது.

முப்படையினரும் வடக்கில் முன்னெடுக்கும் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில் வடக்கு ஆளுநர் இத்தகைய கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.