ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிசந்திரன் ஆகியோர் தங்களை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்தனர். அதில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்டட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி நளினி உட்பட ஆறுபேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.

விரிவான செய்தி:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட மற்ற ஆறு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த எழுவரில், பேரறிவாளனை மட்டும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ன்படி உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்தது. அதைத் தொடர்ந்து நளினி உட்பட சிறையிலிருக்கும் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துவந்தனர்.

பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசு ஏற்கெனவே கொண்டுவந்திருந்த தீர்மானத்தை மேற்கோள்காட்டி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில்  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு, “சிறையில் 30 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஆறு பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்தது” எனத் தெரிவித்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.