2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது லக்னோ!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் களமிறங்கினர். மார்ஷ் 4 ரன்களிலும் அடுத்து வந்த பூரன் 11 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் ரிஷப் பந்த் 3 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
7.4 ஓவர்களில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இணைந்த மார்க்ரம் – ஆயுஷ் பதோனி இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 3 சிக்சர் 5 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து மார்க்ரம் ஆட்டமிழந்தார்.
34 பந்துகளில் 1 சிக்சர் 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஆயுஷ் பதோனி வெளியேறினார். கடைசி ஓவரில் அப்துல் சமத் 4 சிக்சர் விளாச 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் – சூர்யவன்ஷி அருமையான தொடக்கத்தை கொடுத்து 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சூர்யவன்ஷி 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரானா 8 ரன்னில் ஆட்டமிழக்க ரியான் பராக் – ஜெய்ஸ்வால் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. பராக் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 4 சிக்சர் 5 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 25 ரன்கள் தேவையாக இருந்தது. ஆவேஷ்கான் வீசிய அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவையாக இருந்தபோது 19 ஆவது ஓவரில் ராஜஸ்தான் 11 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ராஜஸ்தானுக்கு ஏற்பட்டது. அந்த ஓவரை அற்புதமாக வீசிய ஆவேஷ் கான் ஹெட்மேயர் விக்கெட்டை கைப்பற்றியதுடன் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.