ஐரோப்பிய ஒன்றியக் குழுவுடன் தமிழரசு இன்று விரிவான பேச்சு – கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கக் கோருவர்.

இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய விசேட கண்காணிப்புக் குழுவினரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர் மட்டப் பிரமுகர்கள் இன்று இரவு 7 மணியாளவில் சந்தித்து உரையாட இருக்கின்றனர்.

கொழும்பு, புல்லர்ஸ் வீதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற இருக்கின்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன். நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், வைத்தியர் இ.சிறிநாத், க.கோடீஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைக்குத் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வரும் விசேட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த ஆண்டில் முடிவடைய இருக்கும் சூழலில், அதை நீடிப்பதா என்பது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு கொழும்பு வந்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், இணையப் பாதுகாப்பு சட்டத்தை சீராக்குதல், நல்லாட்சி என்பவை தொடர்பாக இலங்கை சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமை குறித்து இன்றைய சந்திப்பில் தமிழரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டுவர் எனத் தெரிகின்றது.

தமிழருக்கு நீதி வழங்கப்பட வேண்டும், அதிகாரம் முறையான விதத்தில் பகிரப்பட வேண்டும் என்பவை தொடர்பில் இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்குமாறு இன்றைய சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்திக் கோருவர் என்றும் தெரிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.