உக்ரைன் மோதல் – இருளில் தெரியும் ஒளிக்கீற்று சுவிசிலிருந்து சண் தவராஜா

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஸ்ய-உக்ரைன் மோதலில் ஒரு திருப்பமாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான திடமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றான ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தான் எதிர்பார்த்ததைப் போன்று இலகுவான ஒரு விடயமல்ல என்பதை பதவியில் இருந்த நான்கு மாத காலத்தில் ட்ரம்ப் உணரத் தொடங்கிவிட்டார் என்பதை அவரின் அண்மைக் கால அறிக்கைகள் மூலம் அறிய முடிகின்றது. தான் பதவியேற்றதும் 24 மணி நேரத்தில் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என அறிவித்த ட்ரம்பினால் 24 நாட்களில் கூட போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அமெரிக்கா கூறினால் கண்ணை மூடிக் கொண்டு உலக நாடுகள் கேட்கும் என்ற வழக்கமான அமெரிக்க மேலாதிக்க எண்ணம் உக்ரைன் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளிடம் செல்லுபடியாகவில்லை என்பதை கடந்த சில மாதங்களாக உலக அரங்கில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் நன்கு உணர்த்தியுள்ளன. ஒரு வகையில் ட்ரம்ப் போன்ற தலைவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் என்றே கூற முடியும்.

சிறிய நாடாக இருந்த போதிலும் அமெரிக்க வல்லாண்மைக்கு வளைந்து கொடுக்கத் தேவையில்லை என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கி முடிவு எடுக்கக் காரணம் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவே. குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் யேர்மனி ஆகிய நாடுகள் அவருக்குப் பக்கபலமாக இருந்து வருகின்றன. ஆனால், அமெரிக்க மேலாண்மையை எதிர்க்கும் துணிவு அந்த நாடுகளிடம் இல்லை என்பதைப் பின்னாளில் உணர்ந்து கொண்ட ஸெலன்ஸ்கி தற்போது போர் நிறுத்தத்துக்கு இணங்கியே ஆகவேண்டிய நிலைக்கு வந்துள்ளதாகத் தெரிகின்றது.

ரஸ்யாவைப் பொறுத்தவரை போர் நிறுத்தம் உருவாகின்றதோ இல்லையோ அமெரிக்காவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படுவதே பெரிய விடயம் என்ற நினைப்பு உள்ளதைப் போன்று தெரிகின்றது. நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்குத் தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ள ரஸ்யா, போர் நிறுத்தத்தின் நடைமுறைச் சாத்தியம் தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ளது. குறிப்பாக நீண்ட போர் அரங்க முனைகளின் கண்காணிப்பு தொடர்பில் ரஸ்யா கேள்வி எழுப்பியுள்ளது. அதேவேளை, போர் நிறுத்தம் தொடர்பில் நிபந்தனைகளை விதிப்பது உக்ரைனுக்கே சாதகமாக அமையும் என்ற விடயத்திலும் ரஸ்யா கரிசனம் கொண்டுள்ளமை தெரிகின்றது.

மறுபுறம், பெரிய வெள்ளி மற்றும் உதித்த ஞாயிறு பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்திருந்த ரஸ்யா தற்போது இரண்டாம் உலகப் போரில் நாஸி யேர்மனி சோவியத் படைகளால் வெற்றி கொள்ளப்பட்டதன் 80ஆவது வருடக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மேலும் ஒரு குறுகிய காலப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மே 8அம் திகதி முதல் 10ஆம் திகதி வரையான 72 மணி நேரத்துக்கு இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ட்ரம்பின் வேண்டுகோளை ஏற்று சக்தி நிலைகளைப் பரஸ்பரம் தாக்குவதில்லை என இரு தரப்பும் ஏற்றுக் கொண்ட ஒரு மாத காலப் போர் நிறுத்தம் பல மீறல்களைக் கண்டுள்ளதாக இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டமை தெரிந்ததே.

ரஸ்யாவைப் பொறுத்தவரை நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தாலும் பேச்சு வார்த்தை மேசையில் தனது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. கிரீமியா உட்படத் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை உக்ரைனிடம் மீளக் கையளிக்க முடியாது, உக்ரைன் எந்தக் காலகட்டத்திலும் நேட்டோவில் இணைய முடியாது, போர் நிறுத்தம் என்பது தற்காலிகப் போர் நிறுத்தமாக அமையாமல் நிரந்தரப் போர் நிறுத்தமாக அமைய வேண்டும், அதேவேளை போர் நிறுத்தக் காலகட்டத்தைப் பாவித்து தனது படைகளை மீளக் கட்டியெழுப்ப உக்ரைன் முனையக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை ரஸ்யா கொண்டுள்ளது.

ஒரு விதத்தில், கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஸெலன்ஸ்கி உக்ரைனின் நிலப்பரப்பை ரஸ்யாவிடம் விட்டுக் கொடுக்க முடியாது என்ற விருப்பைக் கொண்டுள்ள போதிலும் அதனை வலியுறுத்திச் சொல்லும் இடத்தில் அவர் இல்லை என்பதே யதார்த்தம். இத்தனை நாள் ரஸ்யாவுக்கு எதிராக வீரவசனம் பேசிக் கொண்டிருந்த ஸெலன்ஸ்கி பேச்சு வார்த்தை மேசையில் விட்டுக் கொடுப்புகளுக்கு ஒத்துக் கொள்வது சங்கடத்துக்கு உரியது என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதே.

சலிப்பின் உச்சத்துக்குச் சென்றுள்ள அமெரிக்கா உக்ரைன் விவகாரத்தின் அடிப்படையை உண்மையில் சரியாகப் புரிந்து கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. விரக்தியின் விளிம்பில் உள்ள அமெரிக்கத் தரப்பு தனது உணர்வுகளை வெளிப்படையாகவே தெரிவித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. இரண்டு தரப்பும் தனது நிபந்தனைகளுக்கு இணங்கி வராவிட்டால் மத்தியஸ்த முயற்சிகளில் இருந்து வெளியேறப் போவதாக ஒரு கட்டத்தில் அமெரிக்கா கூறியிருந்தது. ரஸ்யாவுக்கு அதிகம் சாதகமாக ட்ரம்ப் நடந்து கொள்வதாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அமெரிக்காவின் இத்தகைய கருத்து வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தனது இராஜதந்திர நகர்வுகளில் ஒரு முக்கிய அங்கமாக, தனது தனிப்பட்ட கௌரவத்துக்கு உரிய ஒரு விடயமாக உக்ரைன் போருக்கான தீர்வை ட்ரம்ப் கருதிச் செயற்படும் நிலையில் அத்தகைய முயற்சிகளில் இருந்து அமெரிக்கா இலகுவில் வெளியேறி விடாது என்பது எதிர்பார்க்கக் கூடியதே.
முன்னதாக, பெப்ரவரி கடைசியில் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் ஆகியோரோடு மோதிக் கொண்டு பேச்சுக்களில் இருந்து இடைநடுவில் வெளியேறி இருந்த ஸெலன்ஸ்கி வத்திக்கானில் ஏப்ரல் 26ஆம் திகதி நடைபெற்ற புனித பாப்பரசரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோது ட்ரம்ப் அவர்களுடன் குறுகிய நேரப் பேச்சுக்களில் கலந்து கொண்டிருந்தார். அந்தப் பேச்சுக்களின் போது ஸெலன்ஸ்கியின் அணுகுமுறையில் மாற்றம் தென்பட்டதாக ட்ரம்ப் கூறியிருந்தார். “உக்ரைன் அதிபர் தற்போது நிலைமையைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார். இப்போது அவர் ஒரு இணக்கத்துக்குத் தயாராகி விட்டார் „ என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ உக்ரைன் மோதலுக்கு –தற்காலிகமாகவேனும்- ஒரு தீர்வு எட்டப்பட்டுவிட்டால் பெறுமதியான மனித உயிர்கள் காப்பாற்றப் படுவதற்கான ஏதுநிலை உள்ளது. அமெரிக்க அதிபரின் தலையீட்டினால் அவ்வாறான ஒரு இணக்கம் ஏற்பட்டுவிட்டால் அது நீண்ட காலம் நீடிப்பதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. புட்டினும் ஸெலன்ஸ்கியும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இதய சுத்தியுடன் பேச்சுக்களில் கலந்து கொள்வார்களேயானால் தீர்வு வெகு தூரத்தில் இல்லை என்பது நிச்சயம்.

அதற்கு ஸெலன்ஸ்கியின் ஐரோப்பிய நண்பர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. அவர்கள் இந்த விடயத்தில் உதவி செய்யாது விடினும் உபத்திரவம் தராமல் இருந்தாலே போதுமானது.

Leave A Reply

Your email address will not be published.