பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கையை வீழ்த்தி, கோப்பையை வென்றது இந்தியா.

இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்றன. கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது பிரதிகா (30) அவுட்டானார். கேப்டன் சமாரி வீசிய 31வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டிய மந்தனா, ஒருநாள் போட்டியில் தனது 11வது சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய மந்தனா 116 ரன்னில் (2 சிக்சர், 15 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
ஹர்லீன் தியோல் (47), கேப்டன் ஹர்மன்பிரீத் (41), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ஓரளவு கைகொடுத்தனர். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 342 ரன் எடுத்தது. தீப்தி சர்மா (20) அவுட்டாகாமல் இருந்தார்.
டின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி (51), நிலக் ஷிகா (48), விஷ்மி (36), அனுஷ்கா (28), சுகந்திகா (27) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற இலங்கை அணி 48.2 ஓவரில் 245 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஸ்னே ராணா 4, அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் சாய்த்தனர்.ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் மந்தனா (116 ரன்), தொடர் நாயகி விருதை இந்தியாவின் ஸ்னே ராணா (15 விக்கெட்) கைப்பற்றினர்.