வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை: புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு!

வுனியாவில் வைத்தியர் முகைதீனைச் சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்விலேயே இந்தத் தீர்ப்பை இன்று அறிவித்தது. இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.

வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்பட்ட அன்றைய புளொட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரைக் குற்றவாளியாகக் கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்புக்காகத் திகதியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில், குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.

குறித்த மேன்முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணிகளான அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஹப்பு ஆராச்சி ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா, அனில் சில்வா ஆகியோரும் ஆஜராகினர். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.