மன்னார் பிரதேச சபையில் ‘திசைகாட்டி’யுடன் சேர்ந்து தமிழரசை வீழ்த்திய ‘சங்கு’.- ரிஷாத்தின் அணிக்குத் தவிசாளர் பதவியையும் பெற்றுக்கொடுத்தது.

மன்னார் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை வீழ்த்தியுள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குத் தவிசாளர் பதவியையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதன்போது சபையில் உள்ள 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பைக் கோரினர்.

பகிரங்க வாக்களிப்புக்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கிறிஸ்ரி றெவலுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரானுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது உப தவிசாளர் தெரிவுக்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதன்போது 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பைக் கோரினர்.

பகிரங்க வாக்களிப்புக்கமைய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸுக்கு 15 வாக்குகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

அவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்,சுயேச்சைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.