நள்ளிரவில் குரைத்து 67 பேரின் உயிரைக் காத்த நாய்: ஹிமாச்சலப் பிரதேச நிலச்சரிவில் அதிசயம்!

நாய் சரியான நேரத்தில் நிலச்சரிவில் இருந்து 67 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

ஹிமாச்சல பிரதேச கனமழை
ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20 ஆம் திகதி முதல் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, கனமழை பெய்து வந்தது. கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த 20 ஆம் திகதி முதல் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாய் ஒன்று குரைத்ததன் மூலம், அந்த பகுதியில் இருந்த 67 பேர் நிலச்சரிவில் இருந்து காப்பாற்றப்பட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி இரவு 1 மணியளவில், மண்டி மாவட்டத்தின் சியாந்தி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ள வீடுகள் தரைமட்டமானது.

67 பேரின் உயிரை காப்பாற்றிய நாய்
இது குறித்து பேசிய அந்த பகுதியை சேர்ந்த நரேந்திரா, “நள்ளிரவில் 2வது தளத்தில் இருந்த எனது நாய் குறைக்க ஆரம்பித்தது. நான் அங்கு சென்று பார்த்த போது, சுவற்றில் விரிசல் ஏற்பட்டு அது வழியாக தண்ணீர் உள்ளே வந்து கொண்டு இருந்தது.

உடனடியாக கீழே இருந்தவர்களை எழுப்பி வெளியேற சொன்னேன். மேல கிராமத்தில் உள்ள மற்றவர்களையும் எழுப்பி வெளியேறுமாறு அறிவுறுத்தினேன். நாங்கள் கிளம்பிய சிறுது நேரத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், 5 வீடுகளை தவிர மற்ற அனைத்து வீடுகளும் நிலச்சரிவில் தரைமட்டமாகின. 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் உயிர் தப்பினோம்” என தெரிவித்துள்ளார்.

வீடுகளை இழந்து உயிர் தப்பியவர்கள் திரியம்பாலா கிராமத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் தஞ்சமடைந்துள்ளனர். உடமைகளை இழந்த மக்கள், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அரசு சார்பில், பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மற்ற கிராமங்களை சேர்ந்த மக்களும் உதவி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.