யாழ்ப்பாணத்தில் நாளை தமிழ்த் தேசிய வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பிதாமகர்களை நினைவுகூரும் 42 ஆவது தமிழ்த் தேசிய வீரர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவு கேட்போர் கூடத்தில் நாளை சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர் சுரேன் குருசுவாமி தெரிவித்தார்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, மூத்த போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன் உட்பட 53 ஈழ விடுதலைப் போராட்டத்தின் பிதாமகர்களையும் பொதுமக்களையும் அஞ்சலிக்கும் 42 ஆவது ஆண்டு நினைவேந்தலாக இது நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மூத்த ஊடகவியலாளர் வீ.தனபாசிலிங்கம், விருந்தினர்களாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.நவீந்திரா (வேந்தன்], சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.