ஊடக சந்திப்பைப் புறக்கணித்த செல்வம் எம்.பி.

வவுனியாவில் இடம்பெற்ற ரெலோ கட்சியின் ஊடக சந்திப்பை அக்கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறி இருந்தார்.

செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்த குரல் பதிவு தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் கட்சியின் தலைமைக் குழு வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை கூடி ஆராய்ந்து இருந்தது. இதன் பின்னர் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பை ரெலோ கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி நடத்தியிருந்தார். ஊடக சந்திப்புக்கு முன்னதாகவே அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள், ரெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனையும் ஊடக சந்திப்பில் கலந்துகொள்ளுமாறும் பல தடவைகள் கேட்டனர்.

ஆயினும், அதற்கு மறுப்புத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அங்கிருந்து உடனடியாக வெளியேறிச் சென்றிருந்தார். ஊடக சந்திப்பில் தனக்கு அருகாமையில் அமர கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் சிலரை ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி அழைத்த போதும் வேறு எவரும் அதில் கலந்துகொள்ளாது வெளியேறிச் சென்றிருந்தனர்.

இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.