நாமல் சிறை செல்வது செய்த பாவங்களுக்கே! – ஊழல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என மொட்டுக் கட்சியின் கருத்துக்கு அமைச்சர் நளிந்த பதிலடி.

நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல, கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்றங்களுக்காகவே.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

மொட்டுக் கட்சிஇம் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:-

“யாரையும் அரசியல் பழிவாங்கலுக்காகச் சிறையில் அடைக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. ஆனால், மக்கள் பணத்தைத் திருடியவர்கள் மற்றும் அரச அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.

சிறையில் இருந்து கொண்டு தேர்தல் வெல்லலாம் என்பது பழைய காலத்துக் கற்பனை. நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது நோக்கம். அதைத் திசைதிருப்ப இவ்வாறான கருத்துக்களை மொட்டுக் கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.

நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால், அது அவர் செய்த செயல்களுக்கான அறுவடையே தவிர, தேர்தல் வியூகம் அல்ல.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.