எமது கட்சியினராக இருந்தாலும் தயக்கமின்றி கைது செய்யுங்கள்! – பாதாள உலகத் தொடர்புகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராகத் தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவரால் கடந்த மாதம் எழுப்பப்பட்டிருந்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“எமது கட்சி ஒருபோதும் பாதாள உலகச் செயற்பாடுகளுக்குத் துணை போவதோ அல்லது அதனை ஊக்குவிப்பதோ கிடையாது. கொலை, கொள்ளை மற்றும் மோசடி போன்ற எந்தவொரு சட்டவிரோதச் செயல்களையும் நாம் அனுமதிப்பதில்லை; அவற்றை முழுமையாக நிராகரிக்கின்றோம்.

எனவே, எமது கட்சியைச் சேர்ந்த யாராவது இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகச் சான்றுகள் இருக்குமானால், ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவர்களுக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.” – என்று அவர் சபையில் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.