மத்திய கிழக்கு போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரட்டும்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே இலங்கை அரசின் நிலைப்பாடு என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, சபையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலக அமைதிக்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய பதற்ற நிலை உலகப் பொருளாதாரத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும் கவலை வெளியிட்டார்.

இலங்கையின் நிலைப்பாடும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்
சர்வதேச ரீதியாக உருவாகியுள்ள இந்த அச்சுறுத்தல் நிலையிலிருந்து இலங்கை தனித்துச் செயற்பட முடியாது என்று தெரிவித்த அவர், எனினும் இதன் தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும், இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான அனைத்துத் தற்காப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலைச் சாட்டாக வைத்து, உள்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குச் செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்குவதற்குச் சில தரப்பினர் முயற்சிப்பது குறித்து ஜனாதிபதி தனது அவதானத்தைப் பதிவு செய்தார். இவ்வாறான செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது என்பதையும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாடுகளுடன் கைகோர்த்து, உலக சமாதானத்துக்காகத் தனது பங்களிப்பை வழங்க இலங்கை எப்போதும் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.