மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கடும் பாதுகாப்பு – பொலிஸ்மா அதிபர் அவசர உத்தரவு.
இலங்கையில் அமைந்துள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் இந்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைப் பொலிஸார் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமான சூழலைக் கருத்தில்கொண்டு, நாட்டின் அமைதியைப் பேணவும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பொலிஸ்மா அதிபரால் இந்த அவசர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் வகையில், அனைத்துத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் அவற்றின் உத்தியோகபூர்வ அலுவலகங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இலங்கைக்கு வருகை தந்துள்ள மற்றும் இங்கு தங்கியுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணிநேரமும் செயற்படும் விசேட பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள், பிரதான வர்த்தக நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்பவற்றில் பாதுகாப்பு உறுதி செய்யப்படவுள்ளது:
தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், தேவைப்படும் பட்சத்தில் மேலதிக பாதுகாப்பை வழங்குவதற்கும் முப்படையினரின் (இராணுவம், கடற்படை, விமானப்படை) உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஓர் அங்கமாகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
