வாரந்தோறும் புதன்கிழமை அரச விடுமுறை – எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க ஜனாதிபதி தீர்மானம்.

நாட்டில் ஏற்படக்கூடிய எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரச விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தாக்கங்களை எதிர்கொள்வது குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று மாலை விசேட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர், அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் பிரதானிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்திலேயே இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது.

விடுமுறை பற்றிய
முக்கிய விவரங்கள்

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக அமையும்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், துறைமுகம், நீர் விநியோகம் மற்றும் சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் எவ்விதத் தடையுமின்றி வழமை போல் இயங்கும்.

தனியார் துறை

இந்த விடுமுறை நடைமுறையைத் தனியார் துறையினரும் பின்பற்றுவது குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமையில் விடுமுறை
தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?

வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கினால் சனி, ஞாயிறு எனத் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு அரச நிர்வாகம் முடங்கக்கூடும் என்பதாலேயே, முறையான மதிப்பீட்டின் அடிப்படையில் வாரத்தின் நடுப்பகுதியான புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்தார்.

அரச வைபவங்கள் இரத்து

எரிபொருள் சிக்கனத்தை முன்னிட்டு, அரசால் நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும், எதிர்காலப் பாதுகாப்பைக் கருதியே இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.