மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துக! – ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்.

நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அதிக மின்சார நுகர்வு நிலவும் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை முறையான முகாமைத்துவத்துடன் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வலுசக்தி முகாமைத்துவம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனத்தினதும் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விளம்பரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிக மின்சாரம் செலவிடப்படுவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பிலும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைகளைப் பின்பற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.

அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மின்சார நுகர்வை எவ்விதம் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளைப் பணித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.