எரிபொருள் விநியோகச் சிக்கலைத் தீர்க்க அரசால் ஐந்து விசேட அதிகாரிகள் நியமனம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் தீர்மானம்.

அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில், எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து விசேட அதிகாரிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சிக்கல்களைக் கண்டறிந்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதே இந்த ஐந்து அதிகாரிகளினதும் பிரதான பொறுப்பாகும்.

கைத்தொழிலாளர்கள் தமது உற்பத்திகளை நாடெங்கும் விநியோகிப்பதற்குத் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த ஒதுக்கீட்டை அதிகரிக்காவிட்டால், போக்குவரத்துச் செலவு உயர்ந்து பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும். இது எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்பதால், இது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தொழிற்சாலைகள், சதொச உள்ளிட்ட அத்தியாவசிய உணவு விநியோக நிறுவனங்கள், சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய சேவை வழங்கும் நிறுவனங்களின் எரிபொருள் கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் ஊடாக வலுசக்தி அமைச்சிடம் சமர்ப்பித்து, விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

விவசாயம் மற்றும் கடற்றொழில் துறையினருக்கு அரச அதிகாரிகளின் பரிந்துரைக் கடிதங்களுக்குப் பதிலாக, கியூ.ஆர். குறியீட்டு முறையைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றிப் பொருட்களை வழங்குவதையும், விலையேற்றத்தைத் தவிர்ப்பதையும் இலக்காகக் கொண்டு, முறையான எரிபொருள் முகாமைத்துவத்தைப் பேணுமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.