அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

அலகாபாத்,

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார். அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளின் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர்.

இதை ஏற்ற ஓம்பிர்லா, விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். அதை ரத்து செய்யக்கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நாடாளுமன்ற குழு விசாரணையை தொடர அனுமதி அளித்தனர். இதன்படி நாடாளுமன்ற விசாரணைக்குழு விசாரணை நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

இந்த நிலையில், வீட்டில் இருந்து பணம் சிக்கிய விவகாரத்தில் தொடர்புடைய அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார். அதில், “மிகுந்த மனவேதனையுடன், நீதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். இந்தப் பதவியில் பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளதால் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிக்கு உரிய ஓய்வூதியம் உள்ளிட்டட சலுகைகளுக்கு அவர் தகுதியுடையவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.