வறுமையை ஒழிக்கப் பாய்கின்றது நிதி! – “சமூக சக்தி” திட்டத்தின் கீழ் 23 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களுக்கு அனுமதி.

நாட்டின் கிராமப்புற வறுமையை ஒழிக்கும் நோக்கில் அரசால் முன்னெடுக்கப்படும் “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் கீழ், இதுவரை 23 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

“சமூக சக்தி” தேசிய திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்த விசேட மீளாய்வு சந்திப்பு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் களநிலவரம் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகின.

2026 வரவு – செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 23 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாழ்வாதார மேம்பாடு, உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இதுவரை 13 ஆயிரத்து 977 சமூக அபிவிருத்தி சபைகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதற்கான பயிற்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராய்ந்த ஜனாதிபதி, “வழங்கப்படும் நிதியினால் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மேலும், தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இத்திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.