விசாரணைகள் மூலம் மஹிந்தவின் மீள் எழுச்சியை முடக்கவே முடியாது! – சாகர காரியவசம் கடும் எச்சரிக்கை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விசாரணைகள் மூலம் அச்சுறுத்தி, அவரது அரசியல் மீள் எழுச்சியைத் தடுத்துவிடலாம் என எவரும் கணக்குப் போட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இன்றைய நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இந்த நாட்டின் அடிமட்ட மக்களின் இதயங்களில் இடம்பிடித்த ஒரு தலைவர். அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் யாவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை” என்றும் சாகர காரியவசம் சாடினார்.
கடந்த காலங்களிலும் பல்வேறு சவால்களைத் தகர்த்து மஹிந்த ராஜபக்ஷ மீண்டெழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், தற்போதைய அரசியல் சூழலில் மக்களின் ஆதரவு மீண்டும் அவர் பக்கமே திரும்புவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே இவ்வாறான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டினார்.
விசாரணைகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சதித்திட்டமும் வெற்றி பெறாது என்றும், தமது தலைவருக்குப் பின்னால் கட்சித் தொண்டர்களும் மக்களும் இரும்பு அரணாகத் திகழ்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை விசாரணைக்கு ஆஜராகவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் பலரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
