உயிரைக் காத்த செயற்கை நுண்ணறிவு (AI): இன்ஸ்டாகிராம் பதிவால் காப்பாற்றப்பட்ட இளைஞன்!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ இளைஞனின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 7 ஆம் திகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.

மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
அந்த வீடியோவில் அவர் ஒரு வெள்ளை நிற திரவத்தைக் குடிப்பது போன்ற காட்சியும், அந்தப் பதிவின் கீழே “Be happy in your life” என்ற வரிகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.

ஒரு பயனர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளும் வகையிலான வார்த்தைகளையோ, வீடியோக்களையோ பதிவிட்டால் அதனை மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உடனடியாக கண்டறியும்.

இந்த வீடியோ பதிவிடப்பட்ட சில நிமிடங்களிலேயே மெட்டா நிறுவனம் உத்தரப் பிரதேச மாநில பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சமூக வலைதள பிரிவுக்கு எச்சரிக்கை அனுப்பியது. மெட்டா கொடுத்த மொபைல் எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றைக் கொண்டு, அந்த இளைஞர் இருக்கும் இடத்தை அடுத்த சில நிமிடங்களில் துல்லியமாகக் கண்டறிந்து காவல் தலைமையகத்தினர் மீரட் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்குச் சென்று பார்த்தபோது, அந்த இளைஞர் விஷத்தன்மை கொண்ட திரவத்தை குடித்துவிட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மயங்கிக் கிடந்ததுடன் ருகில் அந்த திரவ பாட்டிலும் கிடந்தது.

இதனையடுத்து உடனடியாக இளைஞனை மீட்ட பொலிஸார் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின், தற்போது அவரது உடல்நிலை தேறி, ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் காதல் தோல்வியால் கடந்த சில வாரங்களாகவே தீவிர மன அழுத்தத்தில் இருந்ததும் அதனால் தற்கொலை முடிவெடுத்ததும் தெரியவந்துள்ளது. இன்னிலையில் சமூக வலைப்பதிவால் இளைஞன் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.