பிள்ளையான், சலேயை விடுவிக்கவே கூடாது! – ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் தமிழரசு வலியுறுத்து.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்படக் கூடாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில்,
“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மறைந்துள்ள உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிக்கொண்டுவருவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எனவே, இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை எக்காரணம் கொண்டும் விடுவிக்கக் கூடாது. அவர்களிடம் முறையான விசாரணைகள் தொடரப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்.” – என்றார்.
