ருவன்வெலிசேய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபய, விரஞ்சித் தாம்புகலவுக்கு எதிராகச் சி.ஐ.டியில் புதிய முறைப்பாடு.

https://we.tl/t-ugLPgwwyd83yZTXR

வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ருவன்வெலிசேய மகா சாய விகாரையின் கோபுர உச்சியில் அமைந்துள்ள சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த, சுமார் 1,500 கோடி ரூபா அதிக்கூடிய சந்தை மதிப்புடைய அரிய இரத்தினக்கற்கள் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டமை குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று புதிய முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘சிவ் ஹெள பொது பவுர’ அமைப்பின் மலியதேவ தேரர், இசுருமினியே சித்தார்த்த தேரர் மற்றும் முக்கிய சிவில் சமூக ஆர்வலரான துலான் சேனாதீர ஆகியோரால் இந்தப் புதிய முறைப்பாட்டுப் பத்திரம் சிஐடி தலைமையகத்தில் நேரில் கையளிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து முறைப்பாட்டாளர்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய விவரங்கள் வருமாறு:-

கடந்த 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில், ருவன்வெலிசேய மகா சாய விகாரையின் பல தசாப்த காலப் பழமைவாய்ந்த அசல் சூடாமணிக்கல் இரகசியமாகக் கழற்றப்பட்டு, அதற்குப் பதிலாக போலியான வேறொரு சூடாமணிக்கல் கோபுர உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிரோத மாற்றத்தின் போது, அசல் சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கோடி ரூபா பெறுமதியான விலைமதிப்பற்ற அரிய இரத்தினக்கற்கள் அனைத்தும் முற்றாகத் திருடப்பட்டுள்ளன. அன்றைய காலகட்டத்தில் ருவன்வெலிசேய விகாரையின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பல்லேகம ஹேமரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்சமயம் பல்வேறு நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி விளங்கும் பிரபல தொழிலதிபர் விரஞ்சித் தாம்புகல ஆகியோர் இணைந்து, தங்களுக்குள் இருந்த நெருங்கிய அரசியல் மற்றும் இராஜதந்திரத் தொடர்புகளைப் பயன்படுத்தியே இந்த மகா கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர் என முறைப்பாட்டில் நேரடியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆட்சிக் காலங்களில் இந்த விவகாரம் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், அப்போதைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ‘திருடனின் தாயிடம் மை போட்டுப் பார்ப்பது போல’, சி.ஐ.டியின் அன்றைய பணிப்பாளர் முறைப்பாடு செய்த சிவில் சமூகப் பிரதிநிதிகளையே பழிவாங்கலாகக் கைது செய்து சிறையில் அடைத்திருந்ததாகச் சிவில் ஆர்வலர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

மேலும், மகா சாயவின் அசல் சூடாமணிக்கல் அகற்றப்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான தருணத்திலேயே, கோட்டாபய ராஜபக்ஷ ருவன்வெலிசேவுக்கு முன்னால் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார் என்றும், புனித இடத்துக்கு இழைத்த இந்தத் துரோகத்தின் காரணமாகவே இன்று அவர்களுக்குரிய கர்மவினை மிகச் சரியாகப் பலித்துள்ளது என்றும் அவர்கள் சாடினர்.

தற்போது நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும் புதிய அரசு பதவியில் இருப்பதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் இந்த விவகாரம் குறித்த முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு முறைப்பாட்டாளர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌத்த மக்களின் மிக உயரிய வழிபாட்டுத் தலத்தில் அரங்கேறியுள்ள இந்த விபரீத மோசடி குறித்து விரிவாக ஆராய, விசேட உளவுத்துறை அதிகாரிகள் குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முடுக்கிவிடுமாறும், இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தராதரமிக்க குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனையைப் பெற்றுக்கொடுக்குமாறும் சிவில் அமைப்புகளும் மகா சங்கத்தினரும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.