கோர விபத்தில் பாட்டி, பேரன் பரிதாபப் பலி!

காலி – கொழும்பு பிரதான வீதியின் கட்டுக்குருந்த பகுதியில், தனியார் பஸ்ஸுடன் ஓட்டோ ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி மற்றும் பேரன் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற பொசன் போயா தின வழிபாடுகளை முடித்துவிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஓட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 62 வயதுடைய பாட்டி மற்றும் அவரது 12 வயதுடைய பேரன் ஆகியோர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஓட்டோவை ஓட்டிச்சென்ற தாத்தா பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதிலிருந்த மற்றுமொரு பெண் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ், கட்டுக்குருந்த பிரதான பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன்போது, எதிர்த்திசையில் இருந்து வந்த ஓட்டோ திடீரென பாதையை மாற்றி பஸ்ஸின் முன்பகுதியில் பலமாக மோதியுள்ளது. ஓட்டோவை ஓட்டிய முதியவருக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த விபத்துக் காட்சிகள் அனைத்தும் பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.

விபத்து நடந்த அதிர்ச்சியான சூழ்நிலையைச் சாதகமாக்கிக்கொண்ட பஸ்ஸின் பயணி ஒருவர், ஓட்டுநரின் இருக்கைக்கு அருகில் இருந்த அவரது பையைத் திருடிச் சென்றுள்ள அதிர்ச்சிச் சம்பவமும் அந்த சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

திருடப்பட்ட அந்தப் பையினுள் பஸ்ஸின் பதிவு ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்தன என்று கூறப்படுகின்றது.

இந்தக் கோர விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த திருட்டுச் சம்பவம் ஆகிய இரண்டு விவகாரங்கள் தொடர்பிலும் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.