சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தால் பள்ளத்தில் பாய்ந்தது சிறிய ரக லொறி! – மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில்..
https://we.tl/t-M2q5302sRZy79wqE
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலுகல சிங்கள மகா வித்தியாலயத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, கடவத்தை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி உள்ளிட்ட மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு கித்துல்கல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை வேளையில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணம் என்று தெரிவித்துள்ள பொல்பிட்டிய பொலிஸார், விபத்தால் லொறிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



