இடைவிடாத மழையால் மும்பையில் 5 பேர் உயிரிழப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை: மும்பையில் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

இதைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும், புனே, சதாரா மலைப்பகுதிகளுக்கும் அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இப்பகுதிகளில் வரும் 7-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

கடந்த 4 நாட்களில் மட்டும் மழை மற்றும் மழையினால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் மும்பை, தானே, புனே ஆகிய பகுதிகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று பெய்த பலத்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் மும்பையின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளான தாதர், பரேல், ஹிந்த்மாதா, அந்தேரி, கோரேகான் ஆகிய இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. தஹிசர் மற்றும் கந்தர்படா இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பை மெட்ரோ 2ஏ ரயில் சேவைகள் சுமார் 90 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டன. மழை, வெள்ளம் காரணமாக மும்பை புறநகர் ரயில்களும் வழக்கமான நேரத்தை விட தாமதமாகவே இயக்கப்பட்டு வருகின்றன.

தென்மேற்கு மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக் கடலில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

முதல்வர் வேண்டுகோள்

இதனிடையே, வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.