ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு – பிலிப்பைன்ஸ் பயணம் உறுதி.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை உயர்மட்ட இராஜதந்திர குழுவின் பிரான்ஸ் விஜயம், தவிர்க்க முடியாத காரணங்களால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவும் வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளன.

எதிர்வரும் 16ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் திட்டமிட்டபடி எதிர்வரும் 23ஆம் திகதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பிரான்ஸ் விஜயமானது, பிராந்திய வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் இலங்கையின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக, இலங்கைக் கடற்பரப்பில் பிரான்சின் முன்னணி நிறுவனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களில் பிரான்சின் சி.எம்.ஏ. – சி.ஜி.எம். நிறுவனம் முதலீடு செய்யக் காட்டும் ஆர்வம் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுகள் இடம்பெறவிருந்தன.

இந்த விஜயத்தின் போது, சி.எம்.ஏ. – சி.ஜி.எம். நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் ரோடால்ஃப் சாடே மஹானாவை ஜனாதிபதி சந்தித்து முதலீட்டுத் திட்டங்களை இறுதி செய்யவிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், ஐரோப்பிய வல்லரசான பிரான்ஸின் இந்த எரிசக்தி மற்றும் துறைமுகப் பிரவேசமானது புவிசார் அரசியலில் பெரும் சலனங்களை ஏற்படுத்தியுள்ளது. நெப்போலியனின் வரலாற்றுப் பார்வையின் நீட்சியாகவே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் இந்த நகர்வுகள் அமைந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைத்தல் மற்றும் பிராந்திய எரிசக்தி அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தல் போன்ற இலக்குகளைக் கொண்ட இந்த உயர்மட்ட விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை, இந்தப் பிரம்மாண்ட திட்டங்களின் எதிர்காலம் குறித்த பல புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.