ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை: இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன? – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கை அரசின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளார் என்று ஒருசில ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. உயர்ஸ்தானிகர் தனது வெளிப்படுத்தலில் இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளிப்படுத்தி, மிகுதியாகவுள்ள காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமான நகர்வுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளார். உயர்ஸ்தானிகர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன?”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள அறிக்கை மற்றும் அதற்கு இலங்கை அரசு வழங்கிய எழுத்துபூர்வ பதிலை அடிப்படையாகக் கொண்டு நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மோதல் தொடர்பான மனித உரிமை மீறல்கள் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும், போதிய சான்றுகள் உள்ள நபர்களைத் தகுதியுள்ள நீதிமன்றங்களின் முன் கொண்டு வருவதற்கும் அரசு அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் முன் அரசு இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா? உயர்ஸ்தானிகரின் பொறுப்புக்கூறல் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய மனித உரிமைகள் பேரவைக்கு அளிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவை என அரசு கருதுகின்றதா?

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குத் தொடரல்கள் குறித்து சர்வதேச ரீதியில் அரசு தெரிவித்துள்ள நிலைப்பாடு என்ன? இதில் 2018 ஆம் ஆண்டின் சட்டம் ஏதேனும் வழக்குத் தொடரலில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? மேலும், அரச அதிகாரிகளுக்கு எதிரான நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றதா?

உள்நாட்டு வழிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை என்பதையும், அந்தச் சமூகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற வகையில், தமிழ் பாதிக்கப்பட்ட சமூகம் உள்நாட்டு வழிமுறைகளை மட்டும் ஒருபோதும் ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் பதிவு செய்கின்றேன்.

இந்தச் சூழலில், அர்த்தமுள்ள சர்வதேச பங்கேற்பு, சுயாதீன அரச வழக்கறிஞர்கள், சர்வதேச தடயவியல் நிபுணத்துவம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பு, மற்றும் கட்டளைப் பொறுப்பு உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் பற்றிய விசாரணை தொடர்பாக மனித உரிமைகள் பேரவைக்கு அரசு முன்வைத்துள்ள நிலைப்பாடு என்ன?

அதேபோல் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைக்குழியில் இதுவரையில் 582 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி குறித்து மனித உரிமைகள் பேரவைக்கு அரசு தெரிவித்துள்ள நிலைப்பாடு என்ன?

பாதுகாப்புப் படையினரால் முன்னர் பயன்படுத்தப்பட்ட நிலங்களில் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது. இராணுவம், தொல்பொருள் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள அல்லது உரிமை கோரப்படும் அனைத்து நிலங்கள் தொடர்பாகவும் சர்வதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் எவை என்பதை அமைச்சர் தெரிவிப்பாரா?

250 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று அரசு குறிப்பிடுகின்றது. ஆனால் நடைமுறையில் அவ்வாறான தன்மை ஏதும் காணப்படவில்லை. ஒருசில பகுதிகளில் மாத்திரம் குறுகிய மட்டத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஒருசில வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு அறிவிக்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு உடனடியாகத் இடைக்காலத் தடை விதித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் அந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குதல் தொடர்பாக அரசு சர்வதேச ரீதியில் வழங்கியுள்ள உறுதிமொழி என்ன? தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமானது என்று குறிப்பிடப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல்கள், வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசமைப்பு மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கான காலவரிசை மற்றும் நிலைப்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசு தெரிவித்துள்ள பதில் என்ன? மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். அங்கு காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன.

பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில் அரசு எவ்வாறான வெளிப்படையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசு மந்தகட்டியாகவே செயற்படுகின்றது. உள்ளக விசாரணையைப் பாதிக்கப்பட்ட மக்கள் மறுத்துள்ளனர். கடந்த மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற காணாமல்போனோர் தினத்தில் அதனை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அரசு உள்ளக விசாரணை ஊடாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சர்வதேசத்துக்குக் குறிப்பிடுகிறது. இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துங்கள்.

கடந்த 2 வருட காலத்தில் பேசுபொருளாகிய பல விடயங்கள் தொடர்பான விசாரணை நகர்வுகள் திருப்திகரமாக இல்லை என்று உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒருசில ஊடகங்கள் இதனைத் திரிபுபடுத்தி அறிக்கையிட்டுள்ளன. இன்றும் காலம் உள்ளது. அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். உயர்ஸ்தானிகரின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கின்றோம்.

பல்வேறு படுகொலைகளுடன் தொடர்புடைய பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் இந்தச் செயற்பாடுகளை நாங்கள் வரவேற்கின்றோம். நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமையைப் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளார்கள். ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.