காக்கைதீவு திண்மக்கழிவு நிலையத்தால் சுகாதாரச் சீர்கேடு: யாழ். மாநகர சபைக்கு முன்பாக மக்கள் கவனவீர்ப்புப் போராட்டம்!

https://we.tl/t-8RAz4RbxqhvGhcS3?utm_source=sendgrid&utm_medium=email&utm_campaign=TRN_TDL_05&trk=TRN_TDL_05

யாழ்ப்பாணம், காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்தில் ஏற்படும் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுக்கு நிரந்தர தீர்வு கோரி, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இன்று யாழ். மாநகர சபைக்கு முன்பாகக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஜே/88, ஜே/85 மற்றும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஆறுகால்மடம் பழம் றோட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். மாநகர சபையால் திண்மக்கழிவுகளைத் தரம் பிரித்து, மீள்சுழற்சி மூலம் பசளையாக்கும் நோக்குடன் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியின் கீழ், இந்த நிலையம் வினைத்திறனாகச் செயற்படுத்தப்பட்டு, பல மில்லியன் ரூபா பெறுமதியான பசளை விற்பனை செய்யப்பட்டது என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும், தற்போது அந்த நிலையம் முறையாகப் பராமரிக்கப்படாதமையே அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணமாகியுள்ளது. மீள்சுழற்சிக்காகக் கொண்டுவரப்படும் கழிவுகள் பல நாள்களாக அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்படுவதால், அவை அழுகித் துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீர் வெளியேறி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் ஈக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது என்றும் மக்கள் கவலை வெளியிட்டனர்.

இது குறித்து போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“அழுகிய கழிவுகள் மற்றும் கழிவுநீரால் வயிற்றோட்டம், வாந்திபேதி, சொறி மற்றும் சிரங்கு போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் கழிவுநீர் புகுவதால் எமது இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் நிர்வாக அசமந்தப் போக்கே இந்தச் சுகாதாரச் சீர்கேட்டிற்கு முழுக்காரணம்.” – என்று தெரிவித்தனர்.

அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கழிவு முகாமைத்துவத்தில் முறையான பொறிமுறையை ஏற்படுத்தி, தங்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் உறுதியாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.