தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்த நடவடிக்கை! – 2027 பட்ஜட்டில் முன்னுரிமை என்று ஜனாதிபதி தெரிவிப்பு.

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக இந்நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 303 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் பொதுக் கல்விக்காக 160 பில்லியனும், உயர்கல்விக்காக 122 பில்லியனும் மற்றும் தொழிற்கல்விக்காக 20 பில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் மாத்திரம் அவற்றை செலவிடாமல், தேசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை இனங்கண்டு நிதியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மூலதனச் செலவினமான 08 பில்லியன் ரூபா இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்தின் கீழ் செயற்படும் 310 தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு காலாண்டுகளில் 57,959 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர காணி ஒன்றை வழங்குவது குறித்தும், வாழ்க்கைத் தொழில்சார் தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைச் இணைத்துக்கொள்வதை அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் தரத்தையும் மேம்படுத்தி, பிராந்திய மட்டத்தில் மாணவர்கள் தொழில்நுட்பப் பட்டங்களையும் டிப்ளோமாக்களையும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பொதுக் கல்வியின்கீழ் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளிநாட்டு உதவிகளின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, அவற்றை வெறும் கடன் சுமையாக மாற்றிக்கொள்ளாமல், இந்நாட்டின் கல்விக் கொள்கைகளுக்கு இணங்கவும் தேவைகளின் அடிப்படையிலும் மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப, தகுதியான பயனாளிகளுக்கே நன்மைகள் சென்றடைவதை உறுதி செய்வதற்கான முன்னுரிமைகளைத் தயாரித்துக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர் உதவித்தொகைத் திட்டங்களுக்காக ஜனாதிபதி நிதியம் எப்போதும் தயாராக இருப்பதால், அத்தகைய தேவைகள் குறித்த முன்மொழிவொன்றைத் தயாரித்து அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், 2026 ஆம் ஆண்டு முதல் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்தும், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரியர் மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போது நடைமுறையிலுள்ள மாணவர் காப்புறுதித் திட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

2027 ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக 382 பில்லியன் ரூபா பெருந்தொகையான முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள டிஜிட்டல் பரிமாற்றத் திட்டம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த 20 பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளைப் புனரமைப்பதற்காக 1.9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் கலந்துரையாடுவதற்கும், அதற்காக விசேட ஆணைக்குழுவின் ஊடாக நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.