அர்ச்சுனாவுக்கு எதிராகப் பிடியாணை: நாடாளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை!

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுகொண்டிருந்த வேளை, யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு தொடர்பில் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

தனக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு குறித்துச் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருக்கும் நிலையில், நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை எனக் கூறி தனக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் தனது சிறப்புரிமையும் மீறப்பட்டுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்துத் தாங்கள் குறுஞ்செய்திகள் மூலமே அறிந்ததாகக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள ஒருவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்படுவது சிறப்புரிமைப் பிரச்சினை என்பதால், சபாநாயகர் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

“நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வது அவருக்குரிய சிறப்புரிமையாகும். அவர் மக்கள் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட இந்தச் சட்டவாக்க சபையின் மக்கள் பிரதிநிதி. அவரின் நாடாளுமன்றக் கடமைகளுக்கு எந்த நிறுவனத்தாலும் இடையூறு ஏற்படுத்த முடியாது. இது சிறப்புரிமை மீறலாகும். இது தொடர்பில் நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்” என்று சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியிடம் வலியுறுத்தினார்.

இதேவேளை, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீதிமன்ற உத்தரவு தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, எந்தவொரு சிவில் மற்றும் குற்றவியல் வழக்கிலும் பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பதே சட்டம் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்காக அந்தச் சட்டத்திலிருந்து எவரும் விடுபட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் அநுர கருணாதிலக கருத்துத் தெரிவிக்கையில், இவ்விடத்தில் ஒரு தரப்பு வாதங்கள் மட்டுமே பேசப்படுகின்றன எனவும், நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரியாமல் சரியான விளக்கமின்றித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது குறித்துப் பரிசீலிக்கலாம். எனினும், உரிய தரப்பினர் நீதிமன்றத்தில் எடுக்க வேண்டிய நடைமுறை முறையாக எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

சபையில் எழுந்துள்ள இந்தச் சர்ச்சை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, இது நீதிமன்றத்துடன் தொடர்புடைய ஒரு விடயமாகையால் தம்மால் உடனடியாக அறிவிப்புகள் எதனையும் விடுக்க முடியாது என்றார். மேலும், நீதிமன்றத்திற்கு வருகை தராமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதா அல்லது இது குறித்துக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா என அர்ச்சுனா எம்.பி.யிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார் எனவும், தான் இந்தச் சபையில் பேச்சாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் அமர்வில் கலந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதன்போது, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றச் செயலாளருக்கு அறிவித்து நீதிவானுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகப் பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.