மட்டக்களப்பில் 5 கொலைச் சம்பவங்கள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவரின் மறியல் நீடிப்பு!

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற பலத்த கொடூரமான 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தொடர்ந்து வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தலைமறைவாகியுள்ள லண்டனில் வசிக்கும் ‘பொலிஸ் பாய்ஸ்’ என்பவருக்கு எதிரான பிடிவிறாந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் ரி.எம்.வி.பி. கட்சி உறுப்பினர் சுடப்பட்டமை மற்றும் வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையானும், காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரும் கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி.) கைது செய்யப்பட்டனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுத் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உட்பட 4 பேருக்கு எதிராக கடந்த 2026 ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். அன்றைய தினம் முதல் இவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் இருவரும் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எனினும், பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதில் உள்ள பாதுகாப்புக் காரணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்குச் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இந்தப் படுகொலைச் சம்பவங்களுடன் இராணுவத் தகவல் பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் சி.ஐ.டி.யினர் நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்தனர்.

இதேவேளை, பிள்ளையான் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, கடந்த வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

இதனைப் பரிசீலித்த நீதிவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தகுந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், இணையவழி காணொளி ஊடாக பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் நிலைமைகளைப் பார்வையிட்டார்.

இதன் இறுதியில், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், தலைமறைவாக உள்ள ‘பொலிஸ் பாய்ஸ்’ என்பவருக்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.