அதிகாலை கோர விபத்து! ஐவர் பரிதாப உயிரிழப்பு!! – மொனராகலையில் பெரும் துயரம்.

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

வெல்லவாய – மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், அதற்கு எதிர்த்திசையில் வந்த டிரக்கருடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் டிரக்கரில் பயணித்த 10 பேரில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடைய தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த ஏனைய மூவரும் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் டிரக்கரின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.