பிற உயிர் காக்க முன்வந்த பிஞ்சு: தமிழகத்தின் மிக இள வயது உறுப்பு தானம்!

சென்னை,

பெற்ற பிள்ளையை இழந்த துயரத்திலும், பிற உயிர்களை காக்க முன்வந்த பெற்றோரின் நெகிழ்ச்சியான செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ செய்துள்ளது. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, மிகக் குறைந்த வயதில் உறுப்பு தானம் செய்த பெருமையை இந்த 19 மாத குழந்தை பெற்றுள்ளது.

தீவிர சிகிச்சை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ‘தலைநீர் கோர்வை’ எனப்படும் மூளை பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த 19 மாதக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது. அந்த பிஞ்சு குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 6 நாட்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

உடல் உறுப்புகள் தானம்
இருப்பினும், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக மூளைச்சாவு அடைந்தது. தங்களின் செல்ல குழந்தை இனி மீண்டு வரமாட்டான் என்ற அதிர்ச்சி தகவலை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர். இந்த துயரமான சூழ்நிலையிலும், தங்களின் குழந்தை மற்றவர்களின் உடலாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில், குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.

பெற்றோரின் சம்மதம்
பெற்றோரின் சம்மதத்தை தொடர்ந்து, 19 மாத குழந்தையிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. குழந்தையின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் மற்ற குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளன. சோகத்திலும் துணிச்சலான முடிவெடுத்து, பல உயிர்களுக்கு மறுவாழ்வு தந்துள்ள அந்த பெற்றோரின் தியாகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.