அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும் – நீதி அமைச்சர் நம்பிக்கை.

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையை நேற்று வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்த தாமதம் காரணமாகவே, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23 ஆயிரம் கைதிகள் விசாரணைகள் முடிக்கப்படாமல் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையை மாற்றியமைக்கும் பொருட்டு, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்குப் புதிதாக 70 அதிகாரிகள் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன.

கைதிகளின் அடிப்படைப் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பிரத்தியேகமான கூட்டுப் பொறிமுறை ஒன்றையும் அரசு தற்போது நிறுவியுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.