எல் நினோ’ தாக்கத்தால் இலங்கைக்குப் பேராபத்து! – ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எச்சரிக்கை.

இலங்கை எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைக் காலத்தில் வலுப்பெற்று வரும் எல் நினோ நிலை, அதிகரித்துள்ள எரிபொருள் மற்றும் உரச் செலவுகள், அத்துடன் சாத்தியமான அதிக மழைவீழ்ச்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்று எச்சரித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்திய மதிப்பீட்டில் இலங்கை இதற்காக “உயர் கவனம் தேவைப்படும் நாடாக” வகைப்படுத்தப்பட்டுள்ளது. உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் உலக வானிலை ஆய்வு அமைப்பு உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகள் இணைந்து இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளன.

ஒக்டோபர் முதல் இரண்டாம் இடைப்பருவ மழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை உயர்த்த உதவினாலும், பெரும்போக விதைப்புக் காலத்தில் அதிக மழை பெய்தால் வெள்ளம், வயல்களில் நீர் தேங்குதல் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் கடுமையான தாமதம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடுகையில், டீசல் விலை சுமார் 44 சதவீதமும், பெற்றோல் விலை 41 சதவீதமும் அதிகரித்துள்ளன என்று அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. மேலும், இலங்கை இறக்குமதி செய்யப்படும் உரங்களிலும் சர்வதேச கோதுமை விலைகளிலும் தொடர்ந்து தங்கியிருப்பதால், உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

எல் நினோ நிலை மேலும் வலுப்பெற்று வரலாற்றில் பதிவான மிக வலுவான நிகழ்வுகளில் ஒன்றாக மாறக்கூடும் என்றும், அது 2027ஆம் ஆண்டு வரையிலும் நீடிக்கக்கூடும் என்றும் அறிக்கை குறிப்பிடுகின்றது. இவற்றுடன், இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை செப்டெம்பர் 2026 முதல் நிலையான நேர்மறை நிலைக்கு மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

2026ஆம் ஆண்டின் இறுதியிலும் 2027ஆம் ஆண்டிலும் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுத்து நிறுத்த, காலநிலை கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விவசாயத் தயார்நிலை மற்றும் அவசரகால நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என்று ஐ.நா. அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.