22 ஆவது திருத்தத்தின் ஊடாக தனிக் கட்சி ஆட்சியை நிறுவ அரசு முயற்சி!
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையைக் பெற்றுக்கொண்டு, தற்போது அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீரழிக்கவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்துக் குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் அரசு முயல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைச் சவாலுக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உலகளாவிய நடைமுறைகளை ஆராயும்போது, 22ஆவது திருத்தமானது அனைத்து வகையிலும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழிப்பதாக அமைகின்றது. பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் இதனால் நீதித்துறைக்குப் பாரிய பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போதைய அரசு தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காக நாட்டில் ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதற்கும், இளைஞர் கழகத் தேர்தல்கள் மற்றும் சிவில் பாதுகாப்புச் குழு நியமனங்கள் முதற்கொண்டு ஜனநாயகத்தை முடக்குவதற்கும் இந்தத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையைப் பாதிக்கச் செய்யும் இந்த 22ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் நிறைவேற்றப்படாமல், கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நாட்டில் தொழில் துறைகள் வீழ்ச்சியடைதல், வேலையின்மை அதிகரிப்பு போன்ற பல பாரிய பிரச்சினைகள் நிலவும்போது, அரசிடம் உள்ள ஒரே தேசிய வேலைத்திட்டம் நகைச்சுவையான தீர்வுகளை வழங்குவது மட்டுமே.
அடிப்படை உரிமைகளை மேம்படுத்தும் அரசமைப்புத் திருத்தமே தற்போது அவசியமானது.” – என்றார்.
