கம்பஹா கடலில் இராட்சத அலையில் சிக்கி மாயமான 13 வயது சிறுவனின் சடலமும் மீட்பு! – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் பலி.

கம்பஹா, ஜா – எல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயார் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் உட்பட 4 பேர் பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலில் 35 வயதுடைய தாய் மற்றும் 4 வயது, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த 13 வயது சிறுவனின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

சம்பவம் நடந்ததிலிருந்து பொலிஸாரும், கடற்படையினரும், அந்தப் பகுதி கடலோர மீட்புக் குழுவினரும் இணைந்து எபமுல்ல கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டே அனைத்துச் சடலங்களையும் மீட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் கடலில் நீராடும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.